ஆம்னி பேருந்தில் அமைச்சர் அதிரடி ஆய்வு...! கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு!


ஆம்னி பேருந்தில் அமைச்சர் அதிரடி ஆய்வு...! கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு!


தமிழ் புத்தாண்டையொட்டி  தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட காரணத்தால், சொந்த ஊருக்கு செல்ல அதிகளவில் பயணிகள் குவிந்த காரணத்தால் ஆம்னி பேருந்தில் பயணிக்க கட்டணமாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி வழங்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
 

சிறப்பு பேருந்து இயக்கம்

தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உட்பட தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை தினம் வருவதன் காரணமாக பயணிகள் சொந்த ஊருக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததனர். இதனை கருத்தில் கொண்டு  சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு எப்போதும் இயக்கப்படும் பேருந்துகளுடன் 1,200 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. இதே போல விடுமுறை தினம் முடிவடைந்து சென்னை திரும்புவதற்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் அரசு பேருந்துகளில் இடங்கள்  முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில் தனியார் பேருந்தை பொதுமக்கள் நாடினர்.

 

ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்

பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வருவதை அறிந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு உயர்த்தப்பட்டு விற்பனை செய்தனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு எப்பொழுதும் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து வந்தனர்.  ஆனால் தற்போது இதனை பயன்படுத்திய பேருந்து உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் வெளியானைதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆம்னி பேருந்துகளில் ஏறிய அமைச்சர் பயண கட்டணம் எவ்வளவு கொடுத்தீர்கள் என பயணிகளிடம்  கேள்வி எழுப்பினார். இதற்கு பயணிகள் இணையதளம் மூலம் புக் செய்யப்பட்டதாக தெரிவித்தவர்கள்,3 ஆயிரம் ரூபாய் செலுத்தி நெல்லை செல்வதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சிவசங்கர்,  கூடுதல் கட்டணத்தை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டார்.

 

பேருந்துகளில் அமைச்சர் ஆய்வு

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் அதிக  கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால் வெளிப்படையாக குறைவாக கட்டணம் வசூலிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் ஆன் லைன் மூலமாகவும் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறினார். எனவே இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேருந்து பயணிகளிடம் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார்.

 

Comments

Popular posts from this blog