ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது!1105453759
ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பா.ஜ.க ஆதரவாளர் கைது!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் இடித்து தள்ளியதாக புகார் எழுந்தது. வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் புகுந்து சிலைகளை உடைத்ததாக இந்து மதத்தினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மற்ற மதத்தினருக்கு தொடர்பில்லை என கண்டுபிடித்ததுடன், சிலை உடைப்பில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவிலை புனரமைக்கும் பணியில் கார்த்திக் கோபிநாத் என்பவர் இறங்கினார். இளைய பாரதம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வந்த அவர், தீவிர பா.ஜ.க ஆதரவாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாகவும் காட்டிக் கொண்டார். அமித்ஷா தமிழகம் வருகையின்போது ஏர்போர்டில் சென்று வரவேற்றவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணிக்காக கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.
கோடி கணக்கில் பணத்தை வசூலித்து, கோவில் புனரமைப்புக்கு செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் கார்த்திக் கோபிநாத்-ஐ கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுகவுக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் நோக்கில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் தமிழக பா.ஜ.க கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுவாச்சூர் கோவில் நிதி மோசடி புகார் தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் கார்த்திக் கோபிநாத் என்பவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரையும் பயன்படுத்தியிருந்தார். இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கார்த்திக் கோபிநாத் யார் என்றே தெரியாது எனக் கூறியிருந்தார். யார் என தெரியாது என கூறியவருக்கு ஆதரவாக அண்ணாமலை இப்போது களமிறங்கி இருப்பது ஏன்? திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இதில் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment