விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள்: திருப்பூரில் ஆச்சரியம்1055753030
விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள்: திருப்பூரில் ஆச்சரியம்
திருப்பூர்: திருப்பூரில் விநாயகருக்கு இரண்டு கிளிகள் பூக்களால் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கிருத்திகா தேவி. இவர்கள் வீட்டில் 2 கிளிகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மகள் சாய்ஸ்ரீ இரண்டு கிளிகளுக்கு பேசவும், பாடவும் பயிற்சி அளித்துள்ளார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று குடும்பத்தினர் விநாயகரை வழிபாடு செய்தனர். இதைப்பார்த்த 2 கிளிகளும் பூக்களை கிள்ளி விநாயகருக்கு போட்டு அர்ச்சனை செய்தது. இது அக்கம் பக்கத்தினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சாய்ஸ்ரீ கூறுகையில், ‘‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன்பு நோய் பாதிப்பால் நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்தினோம்.
அதன்பின் கிளி வெளியே சென்றாலும் தானாக வீட்டுக்கு வந்து விடும். மேலும், இன்னொரு கிளியையும் வாங்கி வளர்த்து வந்தோம். இரண்டு கிளிகளும் எங்களது வீட்டில் நண்பர்களாக வளர்கின்றன. இரு கிளிகளுக்கும் பேசவும், பாடவும் பயிற்சியளித்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்திலும், எங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலேயே பூஜைகள் செய்து வந்தோம்.
விநாயகர் சதுர்த்தி அன்று நாங்கள் அனைவரும் வழிபடுவதை பார்த்த இரு கிளிகளும் பூக்களை விநாயகர் மீது தூவி போட்டு அர்ச்சனை செய்தது எங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது’’ என்றார்.
Comments
Post a Comment